தமிழக அரசியலில் பல்வேறு யூகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் திடீரெனச் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்குப் பிறகு, ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், ‘தற்போது எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை’ என்று அறிவித்திருந்தார்.
சமீபத்தில் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கோரியிருந்தார். ஆனால், அவருக்குச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டதால், அது பல வகையான யூகங்களைக் கிளப்பியது. இதன் தொடர்ச்சியாகவே, ஓபிஎஸ் தரப்பு பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிருப்தியில் அறிவித்தது.
அதற்குப் பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனிடம் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று தான் தொலைபேசி வாயிலாக கேட்டிருந்ததாகவும், எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தால், மோடியைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்போம்’ என்றும் கூறியிருந்தார். ஆனால், ஓபிஎஸ் தரப்பு, நயினார் நாகேந்திரனை 6 முறை தொடர்புகொண்டும் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, இந்த முரண்பாட்டை மேலும் அதிகரித்தது.
பாஜகவுடனான மோதல் உச்சத்தில் இருந்த நிலையில்தான், ஓபிஎஸ் திடீரென முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். மேலும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் சமீபத்தில் தவெக-வில் இணைந்ததாலும், ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கி திமுக உடன் கூட்டணி வைப்பார் என்று கூறப்பட்டதாலும் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவியது.
இந்த யூகங்களுக்கு மத்தியில், ஓ. பன்னீர்செல்வம் அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்பின்போது, ஓ. பன்னீர்செல்வத்திற்கு அமித் ஷா சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அவர் தனிக்கட்சி தொடங்கினாலும் கூட, பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அமித் ஷா அறிவுறுத்த வாய்ப்புள்ளதாக யூகங்கள் நிலவுகின்றன.



