நுரையீரல் புற்றுநோய் என்பது உலகளவில் அதிக உயிரிழப்புக்கு காரணமான நோய்களில் ஒன்றாகும். பொதுவாக, புகைப்பிடிப்பவர்களுக்கே வரும் நோயாக கருதப்பட்டாலும், புகைப்பிடிக்காதவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
நுரையீரல் புற்றுநோய் என்றால் பெரும்பாலானவர்கள் உடனே நினைப்பது சிகரெட் புகைப்பதைத்தான். உலகளவில் புகைப்பிடித்தல் இந்த நோய்க்கான முக்கிய காரணமாக இருந்தாலும், புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமே இந்த நோய் வரும் என்பது தவறான நம்பிக்கை. சிகரெட்டை தொட்டுக் கூட பார்க்காத பலரும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து மருத்துவ புற்றுநோய் நிபுணர் டாக்டர் சேதனா பக்ஷி கூறுகையில், “நுரையீரல் புற்றுநோய் பல காரணங்களால் ஏற்படும். புகைப்பிடிப்பது முக்கிய காரணம் என்றாலும், அதுவே ஒரே காரணம் அல்ல. சுற்றுப்புற மாசு, மரபியல் காரணங்கள், சில மருத்துவ சிகிச்சைகள் ஆகியவையும் இதற்கு காரணம்.
நச்சு புகைகள் முதல் கண்களுக்கு தெரியாத வாயுக்கள் வரை, நம்மைச் சுற்றியுள்ள சூழலில் பல ஆபத்துகள் மறைந்துள்ளன. அவற்றில் முக்கியமானது ரேடான் வாயு. இது இயற்கையாக நிலத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தன்மை கொண்டதாகும். இது வாசனையற்றதும், சுவையற்றதும் என்பதால், சிறப்பு பரிசோதனைகள் மூலமே இதனை கண்டுபிடிக்க முடியும்.
மேலும், மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் காற்று மாசும் முக்கிய பங்கு வகிக்கிறது. வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சு துகள்கள் தினமும் நம் நுரையீரலுக்குள் நுழைகின்றன. காலப்போக்கில், இது நுரையீரல் ஆரோக்கியத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் நேரடியாக சிகரெட் புகைக்கவில்லை என்றாலும், புகைப்பவர்களின் அருகில் இருப்பது கூட ஆபத்தானது தான். எனவே, புகைப்பவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். நுரையீரல் புற்றுநோய், புகைப்பிடித்தல் அல்லது மாசு போன்ற வெளிப்புற காரணிகளால் மட்டுமல்ல, சிலருக்கு பிறப்பில் இருந்தே மரபணு மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றங்கள், அவர்கள் புகைப்பிடிக்கவில்லை என்றாலும், நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாக்கும்.
அதேபோல், முன்பிருந்த நுரையீரல் நோய்கள் கொண்டவர்களும், பிற நோய்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை பெற்றவர்களும், காலப்போக்கில் இந்த புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். எனவே, ஆரம்பத்திலேயே சோதனைகள் செய்து, உடல்நலத்தை பராமரிக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், ஆரம்பத்திலேயே நோயை கண்டறிதல் மிக முக்கியம். இது சிகிச்சைக்கு நல்ல பலன் அளிக்கும். புகைப்பிடித்தலை தவிர்ப்பது, நோய் அபாயத்தை குறைக்கும் வழியாக இருந்தாலும், புகைப்பிடித்தல் இல்லாத காரணிகளைப் பற்றிய விழிப்புணர்வும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : நோட்!. சைபர் மோசடிகள்!. உங்கள் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை எவ்வாறு பாதுகாப்பது?.