திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சொக்குபிள்ளைபட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயது மாரியப்பன், தனது மனைவி பழனியம்மாளுடன் வாழ்ந்து வந்தார். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், பழனியம்மாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் மாரியப்பனுக்கு தெரிந்த நிலையில், பழனியம்மாளுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். மேலும், மாரியப்பன் குடும்பம் சமீபத்தில் சிலுக்குவார்பட்டி பகுதியில் குடியேறினர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், மாரியப்பன் தனது வீட்டில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரது கழுத்தில் காயங்கள் இருந்ததால், மருத்துவமனை சார்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் பழனியம்மாளைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவர் மாரியப்பனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை மனைவி ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு கள்ளக்காதலன் சூர்யாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து, நிலக்கோட்டை போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.