பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் திரைப்படம் மதராஸி, செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ருக்மினி வசந்த், பிஜூ மேனன், விக்ராந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தை ஶ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் தான், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “GOAT படத்தில் விஜய் சார் உடன் நடித்த பிறகு, சிலர் என்னை ‘திடீர் தளபதி’, ‘குட்டி தளபதி’ என்று அழைக்க ஆரம்பித்தனர். நான் விஜய் ரசிகர்களை என் பக்கம் இழுக்க முயற்சி செய்கிறேன் என்றும் விமர்சித்தனர். ஆனால், விஜய் சார் உண்மையிலேயே அப்படித் நினைத்திருந்தால், அவருடன் நடிக்கும் அந்தக் காட்சியில் நான் நடித்திருக்கவே மாட்டேன்.
விஜய் சாருடன் தன்னை ஒப்பிட்டு விமர்சிப்பது தவறானது. நானும் விஜய் சாரும் அண்ணன்-தம்பி மாதிரி உறவை பகிர்கிறோம். எந்த நடிகரின் உண்மையான ரசிகர்களையும் ஒருவர் வந்து தன் பக்கம் இழுக்க முடியாது. அது முடியாத ஒன்று. ரஜினி சார் 50 ஆண்டுகளாக ரசிகர்களின் அன்பில் நிலைத்து நிற்கிறார். அஜித் சார், ரசிகர் மன்றமே வேண்டாம் என்று சொல்லியபோதும், அவருக்கான பக்தியும், ரசிகர்களும் குறையவே இல்லை. அதேபோல் விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என ஒவ்வொருவருக்கும் உறுதியான ரசிகர்கள் உள்ளனர். அதேபோலத்தான் எனக்கும் சில ரசிகர்கள் உள்ளனர்” என்று பதிலடி கொடுத்தார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், அண்மையில் தேர்வு செய்து வரும் படங்கள், மற்றும் அவரது வளர்ச்சியை பார்த்து, சிலர் அவரை விஜய்யின் பாதையை பின்பற்ற முயற்சிக்கிறார் என விமர்சனம் செய்து வந்தனர். சினிமாவில் விஜய்யின் இடத்தை பிடிக்கவே சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார் என்ற பேச்சுக்களும் அடிபட்டன. இத்தகைய விமர்சனங்களுக்குத் தான் தற்போது சிவகார்த்திகேயன் பதிலடி கொடுத்திருக்கிறார்.