வாழ்க்கையில் நாம் முன்னேற்றப் பாதையில் செல்லும்போது, புதிய உடைகள் அணிவதோ அல்லது புதிய வாகனங்கள் வாங்குவதோ இயல்பான ஒன்று. ஆனால், அந்த மகிழ்ச்சியான தருணங்களில் மற்றவர்களின் பொறாமை கலந்த பார்வையை நாம் பலமுறை உணர்ந்திருப்போம். இதையே நம் முன்னோர்கள் ‘கண் திருஷ்டி’ என்று அழைக்கிறார்கள். காரணமே இல்லாமல் திடீரென ஏற்படும் உடல் சோர்வு, தலைவலி அல்லது குடும்பத்தில் வெடிக்கும் தேவையற்ற வாக்குவாதங்களுக்குப் பின்னால் இத்தகைய எதிர்மறை ஆற்றல்கள் (Negative Energy) இருப்பதாக கருதப்படுகிறது.
அறிவியல் பூர்வமாக இது விவாதத்திற்குரியதாக இருந்தாலும், உளவியல் ரீதியாகப் பிறரது எதிர்மறை எண்ணங்கள் நம் மனநிலையைப் பாதிக்கும் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய தீய அதிர்வுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள காலம் காலமாகப் பயன்படுத்தப்படும் ஆறு முக்கியப் பொருட்கள் குறித்து இங்கே விரிவாகக் காண்போம்.
உப்பு மற்றும் எலுமிச்சை :
இயற்கையிலேயே கெட்ட சக்திகளை உறிஞ்சும் தன்மை கல் உப்புக்கு உண்டு. வீட்டில் இருப்பவர்களுக்குத் திருஷ்டி பட்டதாக உணர்ந்தால், ஒரு கைப்பிடி உப்பை எடுத்து அவர்களைச் சுற்றித் தண்ணீரில் கரைப்பது இன்றும் பல வீடுகளில் வழக்கமாக உள்ளது. இது உடலில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி ஒருவித நிம்மதியைத் தரும். அதேபோல், வீட்டின் நுழைவாயிலிலோ அல்லது புதிய வாகனங்களிலோ எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாயைக் கட்டுவது ஒரு பாரம்பரிய முறையாகும். இது வீட்டிற்குள் நுழையும் தீய எண்ணங்களை வாசலிலேயே தடுத்து நிறுத்துவதோடு, காற்றில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.
கருப்பு கயிறு மற்றும் நீல கண் கல் :
திருஷ்டியிலிருந்து தற்காத்துக் கொள்ள மிகவும் எளிமையான வழி கருப்பு கயிறு கட்டுவதாகும். கருப்பு நிறம் பிறரின் தீய பார்வையைத் தன்னுள் ஈர்த்துச் சிதைக்கும் கவசமாகப் பார்க்கப்படுகிறது. இதன் நவீன வடிவமாக தற்போது ‘நீல நிறக் கண் கல்’ (Evil Eye) பயன்படுத்தப்படுவது உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. பிறரின் பொறாமைப் பார்வையைத் தன்னுள் இழுத்து, அதை அப்படியே திருப்பி அனுப்பும் ஆற்றல் இதற்கு இருப்பதாக நம்பப்படுவதால், வீடுகள் மற்றும் வாகனங்களில் இது அலங்காரப் பொருளாகவும் இடம்பிடித்துள்ளது.
படிகாரம் மற்றும் கற்றாழை :
வீட்டின் முன் படிகாரக் கல்லைக் கருப்புத் துணியில் கட்டித் தொங்கவிடுவது ஒரு வலிமையான திருஷ்டி பரிகாரமாகும். வீட்டிற்கு வருபவர்களின் பார்வை முதலில் இந்தக் கல்லின் மீது படும்போது, அவர்களின் பொறாமை எண்ணங்களை இது ஈர்த்துக்கொள்ளும். அதேபோல், வாசல் படியில் கற்றாழையை வேரோடு கட்டித் தொங்கவிடும் பழக்கம் இன்றும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தொடர்கிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி நீண்ட காலம் உயிர்வாழும் கற்றாழை, அதே வேகத்தில் வீட்டின் மீது விழும் கண் திருஷ்டியையும் உறிஞ்சிவிடும் என்பது ஐதீகம்.



