திருநெல்வேலி அருகே நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால், அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்கூட்டத்தில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் இரு தரப்பு தொண்டர்களையும் ஆத்திரமடைய செய்தன. இதனால், ஆவேசமடைந்த தொண்டர்கள் ஒருவருக்கொருவர் காலணிகளை வீசி தாக்கிக் கொண்டதோடு, அங்குக் கிடந்த விறகுக்கட்டைகளையும் ஆயுதமாக பயன்படுத்திச் சரமாரியாக தாக்கினர்.
இந்த வன்முறையில் இரு தரப்பைச் சேர்ந்த இரண்டு தொண்டர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர்கள், சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலுக்கு இரு கட்சிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் அரசியல் பகை மற்றும் மேடையில் பேசப்பட்ட காரசாரமான விமர்சனங்களே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் ஒரு கட்சியின் கொள்கைகளை மற்றொன்று கடுமையாக சாடிய போது, பொறுமை இழந்த தொண்டர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், திருநெல்வேலி மாவட்டக் காவல்துறையினர் விரைந்து வந்து தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read More : உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி..? இனி தங்கம் விலை அதிரடியாக குறையப்போகுது..!! ஒரு சவரனுக்கு ரூ.18,000..!!



