உலக நாடுகள் இணைந்து இஸ்ரேல் – காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர குரல் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார். இந்தப் பரிந்துரைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்திருக்கும் அதேவேளையில், காஸாவில் எஞ்சியிருக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரம்ப் முன்வைத்துள்ள 20 அம்சத் திட்டத்தில், போர் நிறுத்தம், ஹமாஸிடம் பிடிபட்டிருக்கும் பிணைக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல், இஸ்ரேல் படிப்படியாக காஸாவிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றை முக்கியமாக வலியுறுத்துகிறது. மேலும், இந்தப் பரிந்துரை காஸாவின் மறுகட்டமைப்புக்கு உறுதியளித்தாலும், அது ஒரு பாலஸ்தீன அரசு அமைவதற்கு எந்த ஒரு பாதையையும் அமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில், சவூதி அரேபியா, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, துருக்கி, கத்தார் மற்றும் எகிப்து உள்ளிட்ட பல முக்கிய உலக மற்றும் அரபு நாடுகள் வரவேற்றுள்ளன. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் இந்தத் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த 20 அம்ச அமைதித் திட்டப் பரிந்துரைகளுக்கு ஹமாஸ் பதிலளிக்க ட்ரம்ப் 3 முதல் 4 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இந்தக் காலக்கெடுவுக்குள் பதிலளிக்கத் தவறினால், “முடிவு மிக மோசமானதாக இருக்கும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் தேசியத் தலைவர்களிடமிருந்து, ட்ரம்ப்பின் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், ஹமாஸும் தங்களுடைய தரப்பில் சில கோரிக்கைகளை முன்வைப்பதற்குப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், காஸா நகரில் (வடக்கு காஸா) எஞ்சியுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இதுவே கடைசி வாய்ப்பு என்றும், வெளியேற மறுப்பவர்கள் பயங்கரவாதிகளாக கருதப்படுவார்கள் என்றும் இஸ்ரேலிய அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், தெற்கு காஸாவில் வசிப்பவர்கள் வடக்கு நோக்கி நகர்வதற்கான கடைசி பாதையை மூடுவதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இஸ்ரேலிய அதிகாரிகள், வடக்குப் பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க கடலோரப் பாதையில் தெற்கு நோக்கி நகர முடியும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். மொத்தத்தில், சர்வதேச சமூகம் அமைதிக்காக உழைக்கும் நிலையில், இஸ்ரேலின் இந்த இறுதிக் காலக்கெடு அறிவிப்பு காஸா பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.