1930களின் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. இது மருத்துவ உலகிலும், சட்ட உலகிலும், மற்றும் பொதுமக்களிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. கார்ல் வான் கோசல் ( Dr. Carl von Cosel) (உண்மைப் பெயர்: Carl Tanzler), ஒரு ஜெர்மன்-அமெரிக்க மருத்துவர், தனது நோயாளி Maria Elena Milagro de Hoyos மீது கொண்ட காதலால், மரணத்திற்குப் பின்னரும் அவருடன் காதல் உறவைத் தொடர்ந்தார்.
காதலின் தொடக்கம்
1931 ஆம் ஆண்டு, 22 வயது கொண்ட அழகான கியூபா-அமெரிக்க இளம் பெண் எலேனா டி ஹொயோஸ், ட்யூபர்குலோசிஸ் (காசநோய்) நோயால் பாதிக்கப்பட்டு, புளோரிடாவின் கீ வெஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தார். அங்கு ரேடியோலாஜிஸ்டாக பணியாற்றிய டாக்டர் கோசெலுக்கு அவரை பார்த்த உடன் காதல் மலர்ந்தது.. “இவள் தான் என் கனவுக் காதலி” என்று நம்பினார்.
மரணம் மற்றும் அதற்குப் பின் நடந்தது
எனினும் சிகிச்சை முயற்சிகள் தோல்வியடைந்து, 1931 அக்டோபரில் எலேனா இறந்தார். கோசெல், அவளின் இறுதிச்சடங்கு செலவுகளைத் தானாக ஏற்றுக்கொண்டார். அவர், தனது காதலிக்கு ஒரு கல்லறை அமைத்தார், அதற்கான திறவு சாவியை தன்னிடமே வைத்துக்கொண்டார். தினமும் கல்லறைக்கு சென்று காதலி உடன் “பேசுவதாக” அவர் கூறினார்.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் செய்தது தான் உச்சக்கட்ட அதிர்ச்சி.. 1933ல், அவர் கல்லறையை உடைத்து, எலேனாவின் உடலை வெளியே எடுத்தார்.
அதை ஒரு காரில் வைத்து இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு கொண்டு வந்தார்.
சடலத்தைப் பாதுகாத்த விதம்
எலேனாவின் உடல் காலத்தால் சிதைவதைக் கண்டு, கோசெல் பல “பாதுகாப்பு” முறைகளைப் பயன்படுத்தினார்.. சிதைந்த தோல் மற்றும் தசைகளைக் பட்டு, மெழுகு, பிளாஸ்டர் கொண்டு மாற்றினார். கண்களை கண்ணாடிப் பந்துகளால் மாற்றினார்.
முடி உதிர்ந்ததால், அவளின் தாயிடம் இருந்து பெற்ற முடியைப் பயன்படுத்தி விக் செய்தார். சடலத்தின் நாற்றத்தை தடுப்பதற்காக, பெர்ஃப்யூம், disinfectant, formaldehyde பயன்படுத்தினார். அவளுடைய உடலுக்கு ஆடை அணிவித்து, நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, அவரது படுக்கையில் வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் எலெனாவின் உடலில் பல மாற்றங்கள் தெரியவந்தது, ஆனால் உடலுறவுக்கான எந்த ஆதாரமும் இல்லை
7 ஆண்டுகள் சடலுத்துடன் உறவு
1933 முதல் 1940 வரை, அவர் எலேனாவை தனது படுக்கையில் வைத்து, தனது மனைவியாக நடத்தி வந்துள்ளார்.. அவளுக்கு உடை அணிவித்தார், ஆபரணங்கள் அணிவித்தார். அக்கம் பக்கத்தினர், வீட்டிலிருந்து வரும் இனிய இசை, மணமிக்க வாசனை குறித்து பேசினார்கள், ஆனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.. . எலெனாவை உயிர்ப்பிக்க முடியும் என்று அவர் நம்பினார். விமானம் போன்ற வடிவிலான ஒரு ஆய்வகத்தை அவர் கட்டினார், மேலும் எலெனாவை அடுக்கு மண்டலத்தில் பறக்கவிடுவது உயிரை மீட்டெடுக்கும் என்று கூறினார்.
எப்போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது?
1940ல், எலேனாவின் சகோதரி Florinda, கோசெலின் வீட்டிற்குச் சென்றார். அங்கே மனித உருவம் போல் தோன்றிய பொம்மை போல இருந்தது, ஆனால் அது எலேனாவின் சடலமே என்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் காவல்துறையை அழைத்து இந்த தகவலை சொன்னார். விசாரணையில், கோசெல் அனைத்தையும் ஒப்புக்கொண்டார். கோசெல் மீது சடலம் திருட்டு (grave robbery) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், சட்டப்படி இத்தகைய குற்றத்திற்கு 2 ஆண்டுகள் காலவரையறை இருந்ததால், வழக்கு காலாவதியாக போனது. அவர் தண்டனை இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.
பொது மக்களின் கருத்து
ஆச்சரியப்படும் விதமாக, பொதுமக்கள் அவர் மீது பரிதாபப்பட்டனர். எலெனாவின் உடல் ஒரு இறுதிச் சடங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டது, அங்கு 6,000 பேர் அதைப் பார்க்க வந்தனர், பின்னர் அது மீண்டும் ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. பலர் அவரை “உண்மையான காதலன்” எனவும், சிலர் “பைத்தியக்காரன்” எனவும் கருதினர். செய்தித்தாள்களில் அவரைப் பற்றிய காதல் கதைகளையும், திகில் சம்பவங்களும் எழுதப்பட்டது…
கோசெலின் முடிவு
கோசெலுக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தாலும், பின்னர் அவர்களை விட்டு பிரிந்து புளோரிடாவில் அமைதியாக வாழ்ந்தார். 1952ல், 75 வயதில், தனிமையில் மரணமடைந்தார். அவரை அவரது வீட்டில் ஒரு பொம்மையை அணைத்தபடி இறந்த நிலையில் கண்டனர்.. அது எலேனாவைப் போல உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வினோதமான நிகழ்வு இதுவரை சொல்லப்பட்ட விசித்திரமான காதல் கதைகளில் ஒன்றாக உள்ளது.
Read More : அடுத்த 10 ஆண்டுகளில் AI மனிதகுலத்தை அழித்துவிடுமா? அது எப்படி நடக்கும்? மிரள வைக்கும் ஆய்வுக்கட்டுரை..