மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சந்தானம் கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வர் என்பவரது மனைவி மனிஷா (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், பரமேஸ்வர் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கணவர் கிடைக்காததால், மனிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், கடந்த முன்தினம் அப்பகுதியில் உள்ள அணையில் இருந்து ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது. அது காணாமல் போன பரமேஸ்வரின் உடல் என்று விசாரணையில் உறுதியானதுடன், அவர் கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, தீவிர விசாரணையை தொடங்கிய போலீசார், கணவர் காணாமல் போனதாக முதலில் புகார் அளித்த மனிஷாவின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மனிஷாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மனிஷாவுக்கும், அவருடைய கணவரின் இளைய சகோதரர் தியானேஸ்வருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. இவர்களின் உறவுக்கு பரமேஸ்வர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால், தங்கள் உறவுக்கு தடையாக இருக்கும் பரமேஸ்வரை கொலை செய்ய இருவரும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர்.
திட்டமிட்டபடி, கடந்த மாதம் 15ஆம் தேதி இரவு, தியானேஸ்வர் தனது அண்ணன் பரமேஸ்வரை தலையில் கல்லால் தாக்கி உள்ளார். அதே நேரத்தில், மனிஷா ஒரு துணியை கொண்டு பரமேஸ்வரின் கழுத்தை நெரித்துள்ளார். இருவரும் சேர்ந்து அவரைத் துடிதுடிக்கக் கொலை செய்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு, உடலை அடையாளம் தெரியாமல் மறைக்க, இருவரும் சேர்ந்து சடலத்தை ஒரு பாலித்தீன் பையில் சுற்றி, அதில் கனமான கல்லைக் கட்டி அணையில் வீசியுள்ளனர். இந்தச் கொடூரச் செயலை ஒப்புக்கொண்டதையடுத்து, போலீசார் மனிஷா மற்றும் அவருடைய மைத்துனர் தியானேஸ்வர் ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.



