பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியரான ராஜ்குமார், தனது மனைவி பிரவீணாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, மர்ம கும்பல் ஒன்று பிரவீணாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்தது. தொடக்கத்தில் மர்ம நபர்கள் தாக்கியதாகக் கூறி, தானும் காயமடைந்தது போல் ராஜ்குமார் நாடகமாடினார். ஆனால், காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தன் மனைவியை தீர்த்துக்கட்ட ராஜ்குமாரே தனது அண்ணியுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவியது அம்பலமானது.
இந்த கொலைக்கு மூல காரணமாக அமைந்தது ராஜ்குமாருக்கும், அவரது அண்ணி ஆனந்திக்கும் இடையே இருந்த முறையற்ற உறவு. இருவரும் முன்னதாக வீட்டை விட்டு ஓடியபோது போலீசாரால் எச்சரிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், அந்த தொடர்பை தொடர துடித்த ராஜ்குமாருக்கு தனது மனைவி பிரவீணா பெரும் முட்டுக்கட்டையாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, அண்ணி ஆனந்தியை ஊர் மக்கள் முன்னிலையில் பிரவீணா கண்டித்து அவமானப்படுத்தியதால், ஆத்திரமடைந்த ராஜ்குமாரும் ஆனந்தியும் சேர்ந்து பிரவீணாவை தங்களது பாதையிலிருந்து அகற்ற திட்டமிட்டனர்.
இதற்காக ஆனந்தியின் உறவினரான தீபக் என்ற ரௌடிக்கு 2 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு, கொலையை முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. சம்பவத்தன்று இரவு, வேலைக்கு செல்வதாக கூறி ராஜ்குமார் தனது மனைவியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே பதுங்கியிருந்த தீபக் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரவீணாவை சரமாரியாக தாக்கி, கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர்.
இது வழிப்பறிப் படுகொலை போலத் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காகப் பிரவீணாவின் நகைகளை திருடியதோடு, ராஜ்குமார் மீதும் லேசான காயங்களை ஏற்படுத்தி தாக்குதல் நாடகத்தை அரங்கேற்றினர். ஆனால், ராஜ்குமார் அளித்த முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை வலுப்படுத்தின.
போலீசாரின் தீவிரப் புலனாய்வில், ராஜ்குமார் மற்றும் ஆனந்திக்கு இடையே நடந்த செல்போன் உரையாடல்கள் மற்றும் கூலிப்படைக்கு தரப்பட்ட பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் ஆதாரமாக சிக்கின. அதன் அடிப்படையில் ராஜ்குமார், ஆனந்தி மற்றும் கூலிப்படையை சேர்ந்த 5 இளைஞர்கள் என மொத்தம் 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.



