தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த இளத்தூர் கிராமத்தில் சினிமாவை மிஞ்சும் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 30 வயதான பேச்சியம்மாள் என்பவரது கணவர் கோவையில் எலக்ட்ரிஷியன் வேலை பார்த்து வந்த நிலையில், அந்தப் பெண் எதிர்வீட்டில் வசித்த தனது மாமன் மகன் மாடசாமியுடன் கள்ள உறவில் இருந்து வந்துள்ளார்.
இந்த கள்ளக்காதல் ஜோடி, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனைக் கவனித்த மாடசாமியின் தாய் இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், பேச்சியம்மாளின் கணவனிடம் இதுபற்றித் தெரிவித்தும், அவர் மனைவியின் மீது கொண்ட நம்பிக்கையால் அதை அலட்சியப்படுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில், மாடசாமி பேச்சியம்மாளை கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு தன்னுடன் வந்துடுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு பேச்சியம்மாள் மறுத்த நிலையில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருநாள், பேச்சியம்மாள் மாடசாமியை தனது வீட்டிற்கு அழைத்து, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது, அவரை ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு, தலையணையால் முகத்தை அழுத்தி கழுத்தை நெறித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொலையை மறைப்பதற்காக, தனது தாய் மாரியம்மாள் மற்றும் 17 வயது சகோதரனின் உதவியுடன், மாடசாமியின் உடலை அவரது வீட்டின் அருகிலேயே உள்ள செப்டிக் டேங்கில் போட்டு மூடியுள்ளனர்.
கொலை நடந்து 8 மாதங்களுக்குப் பிறகு, பேச்சியம்மாள் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் புதுப்பிக்க சென்றபோது, செப்டிக் டேங்கில் எலும்புக் கூடுகளை பார்த்துள்ளார். இதையடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், இறந்தது மாடசாமி என்றும் அவரை கொலை செய்தது பேச்சியம்மாள், அவரது தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.