திரைத்துறையில் முன்னணி நடிகைகளாக இருந்த பலர், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி, சொந்தமாக தொழில் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஹோட்டல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களிலும் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கிக் கொள்வதோடு, அதில் முழுமையாக ஈடுபடவும் தொடங்கி விட்டனர்.
அந்த வகையில், ஒரு காலத்தில் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்த துலிப் ஜோசி, தற்போது சினிமாவை விட்டு விலகி முற்றிலும் வேறுபட்டுள்ளார்.
திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த துலிப் ஜோசி, திடீரென சினிமாவை விட்டு முழுமையாக விலகியுள்ளார். சினிமாவில் இருந்து விலகிய அவர், தற்போது ஜோதிடத் துறையில் ஆர்வம் காட்டி, இப்போது ஒரு பிரபல ஜோதிடராக மாறிவிட்டார். தனது கணிப்புகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், ஜோதிடம் மட்டுமின்றி, தனது கணவர் வினோத் நாயருடன் சேர்ந்து ஒரு பெரிய நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.700 கோடி இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.