இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். சச்சின் டெண்டுல்கரின் பால்ய கால நண்பரான இவர், அவருடன் இணைந்து பள்ளிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் இந்திய அணிக்கும் தேர்வாகி பல போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். 1993ஆம் ஆண்டில் இருந்து 2000 வரை இந்திய அணிக்காக 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடியுள்ளார். 51 வயதான வினோத் காம்ப்ளி தற்போது மும்பை நகரில் உள்ள பாந்திரா பகுதியில் மனைவி ஆண்ட்ரியாவுடன் வசித்து வருகிறார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், வினோத் காம்ப்ளி மீது அவரது மனைவி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், வினோத் காம்ப்ளி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று வினோத் தீவிர மதுபோதையில் இருந்ததாகவும், மனைவி ஆண்ட்ரியாவுடன் சண்டை போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே சண்டை தீவிரமடைந்த நிலையில், வினோத் காம்ப்ளி சமையல் பாத்திரத்தின் கைப்பிடியை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார். இதில் மனைவி ஆண்ட்ரியாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கிரிக்கெட் பேட்டை கொண்டு வினோத் அடிக்க முயன்றறுள்ளார். அதில் இருந்து மனைவி ஆண்ட்ரியா தன்னை தற்காத்துக் கொண்டார்.
குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். பாந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன் பின்னர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆண்ட்ரியாவின் புகாரின் பேரில் 324 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வினோத் காம்ப்ளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காம்ப்ளி கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.