தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’, தற்போது தனது 9-வது சீசனுக்கு தயாராகி வருகிறது. 2017-ஆம் ஆண்டு தொடங்கி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் புதிய அம்சங்களுடனும், சுவாரஸ்யமான திருப்பங்களுடனும் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த சீசனில் முதன்முதலாக தொகுப்பாளராக அறிமுகமாகிய நடிகர் விஜய் சேதுபதி, இந்த 9-வது சீசனிலும் தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் 8-வது சீசனில், கமல்ஹாசன் இடைவெளி எடுத்ததைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி தொகுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த சீசனில், பிக்பாஸ் வீட்டில் புதிய விதிமுறைகள், சமூக வலைத்தள பிரபலங்கள் மற்றும் இணையதளத்துடன் இணைந்த ‘லைவ்’ அனுபவம் என பல நவீன அம்சங்கள் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பார்வையாளர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் நிகழ்ச்சியை 24 மணி நேரம் நேரலையாக பார்க்கும் வசதியுடன், தங்களது கருத்துக்களையும் நேரடி கமெண்ட் வாயிலாக பகிரும் புதிய அம்சம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் 9-வது சீசனில் யார் யார் போட்டியாளர்களாக உள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் பெயர்கள், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பிரபலமானவர்கள், இந்த சீசனில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது,
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜூ ஜெயமோகன், அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் ஆகியோர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 8-வது சீசனில், முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ரூ.50 லட்சம் பரிசுத்தொகையும் பெற்றார். சௌந்தர்யா 2ஆம் இடம் பிடித்தார்.
அந்த சீசனில், சாச்சனாவின் உடனடி வெளியேற்றம், அர்ணவின் எதிர்வினைகள், தீபக்கின் நிதானம் மற்றும் அன்ஷிதா–விஷால்-தர்ஷிகா ஆகியோரின் காதல் கண்ணோட்டம் போன்றவை நிகழ்ச்சியின் ஹைலைட்களாக இருந்தன. இந்நிலையில், இந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் 9 சீசன் தொடங்கும் என ஜியோ ஸ்டார் தென்னிந்திய பிராந்தியத் தலைவர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
Read More : “கதை எழுத துப்பு இல்ல”..!! இது உனக்கு பான் இந்தியா படமா..? கூலியை வெச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்..!!