கொல்கத்தாவின் சால்ட் லேக்கில் உள்ள யூபா பாரதி கிரீரங்கன் (Salt Lake Stadium) மைதானத்தில், உலகப் புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் GOAT இந்தியா சுற்றுப்பயணத்தின் முதல் கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது மெஸ்ஸியை நேரில் பார்க்க முடியாததால், பார்வையாளர்கள் ஒரு பகுதி கட்டுப்பாட்டை இழந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மெஸ்ஸியை நன்றாக காண முடியவில்லை என்ற ஏமாற்றம் காரணமாக சிலர் பாட்டில்கள், நாற்காலிகள் ஆகியவற்றை வீசி, மைதானத்தின் உடைமைகளை சேதப்படுத்தினர். நிலைமை கைமீறி சென்றதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த ஆர்.ஏ.எஃப் படையினர் மைதானத்தில் பணியமர்த்தப்பட்டனர்.
மெஸ்சி இன்று அதிகாலை 2.26 மணிக்கு கொல்கத்தாவில் தரையிறங்கினார். அதன் பின்னர், அவர் நகரில் அமைக்கப்பட்டுள்ள 70 அடி உயர மெஸ்ஸி சிலையை இணையவழியில் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் அவர் சால்ட் லேக் மைதானத்திற்குள் நுழைந்தார்.
மைதானத்திற்குள் நுழைந்ததும், மெஸ்ஸியை அரசியல் தலைவர்கள், முன்னாள் கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் சூழ்ந்துகொண்டனர். இதனால், மைதானம் முழுவதும் நிரம்பி இருந்த ரசிகர்களுக்கு தங்கள் நாயகனை தெளிவாக பார்க்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே கிடைத்தது.
மைதானத்தில் குறுகிய நேரம் இருந்த மெஸ்சி எப்போதும் போல் புன்னகையுடன் ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்தினார். ரசிகர்கள் காதை பிளக்கும் அளவிற்கு உற்சாக முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, மோகன் பாகன் ‘மெஸ்சி’ ஆல் ஸ்டார்ஸ் மற்றும் டைமண்ட் ஹார்பர் ‘மெஸ்சி’ ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற கண்காட்சி போட்டியில் பங்கேற்ற முன்னாள் இந்திய கால்பந்து வீரர்களை சந்தித்து சிறிது நேரம் உரையாற்றி வாழ்த்து தெரிவித்தார்…
மேலும், மெஸ்ஸியின் மைதானத்தை சுற்றிவரும் மரியாதை நிகழ்ச்சியின் போது, பாதுகாப்புப் படையினரும் ஏற்பாட்டாளர்களும் ரசிகர்கள் திரண்டிருந்த பகுதிகளை அகற்ற பலமுறை முயன்றனர். இருப்பினும், கூட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால், மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்த ரசிகர்களுக்கும் மெஸ்ஸியை தெளிவாக காணும் ஏற்பாடு செய்ய முடியாமல் போனது.
இதுவே பின்னர் ஏற்பட்ட கலவரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மைதானத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் முழுமையாக நடைபெற முடியாமல் போனது. ஒன்று, சந்தோஷ் டிராபி வென்ற மேற்கு வங்க அணிக்கு பாராட்டு விழா, மற்றொன்று குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மாஸ்டர் கிளாஸ் வித் மெஸ்ஸி” நிகழ்ச்சி. இந்த இரண்டும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
கடுமையான பாதுகாப்புடன் மெஸ்ஸி மைதானத்தை விட்டு வெளியேறியதை பார்த்ததும், ரசிகர்கள் பொறுமை இழந்தனர். அவர்கள் பாட்டில்கள் மற்றும் போஸ்டர்களை வீசத் தொடங்கினர். பெரும் மைதானம் முழுவதும் பலத்த பூச்சல் மற்றும் கூச்சல் ஒலித்தது.
ரசிகர்களின் கோபம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தது, இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் செலுத்திய அதிகமான டிக்கெட் கட்டணம் தான். மெஸ்ஸி பந்துடன் திறமைகளை காட்டுவார் அல்லது ரசிகர்களிடம் பேசுவார் அல்லது தெளிவாக பார்க்கும் வாய்ப்பாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் அவர்கள் வந்திருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாததால் ரசிகர்களிடையே அதிருப்தி வெடித்தது.
மெஸ்ஸி வெளியேறிய சில நிமிடங்களிலேயே, ரசிகர்கள் சால்ட் லேக் மைதானத்திற்குள் நுழைந்து, மையப் பகுதிக்குச் சென்று திரண்டனர். மைதானத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடைகள் மற்றும் கூடாரங்கள் சேதப்படுத்தப்பட்டன.
ரூ.4,500 முதல் ரூ.10,000 வரை பணம் கொடுத்த டிக்கெட் வாங்கியிருந்த ரசிகர்கள், கோபத்தில் பாட்டில்களை வீசி, ஃபைபர் கிளாஸ் இருக்கைகளை உடைத்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், போலீசார் தலையிட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த பெரும் சிரமம் அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸியுடன் சேர்ந்து, அவரது இன்டர் மையாமி அணியின் வீரர்கள் லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதனிடையே, மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற லியோனல் மெஸ்ஸி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை வழங்குமாறு மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்..
அதிக விலை கொண்ட டிக்கெட்டுகளை வாங்கியிருந்தும், நிகழ்ச்சியின் போது தங்கள் விருப்பமான வீரர் மெஸ்ஸியை நேரில் பார்க்க கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் சிலர் புகாரளித்ததால் ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்..
மெஸ்ஸியின் கொல்கத்தா வருகையில் மாநில அரசின் பங்கு என்ன என்பதையும் ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பொதுமக்களின் உணர்ச்சிகளை பயன்படுத்தி ஒருவர் பணம் சம்பாதிக்க அனுமதிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.



