விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்றோர் வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், ரூ.2 கோடி வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு ரூ.5,990 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 2025-26 ஆம் ஆண்டிற்கு ரூ.3,456 கோடியும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.73 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
இந்தத் திட்டத்தின் கீழ், அறுவடைக்குப் பிந்தைய வேளாண் கட்டமைப்புகளான சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன வசதிகள், போக்குவரத்து வசதிகள், மதிப்புக்கூட்டல் மையங்கள், இயற்கை இடுபொருள் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை உருவாக்க கடன் பெறலாம்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள், மற்றும் வேளாண் தொழில்முனைவோர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
கடன் சலுகைகள் :
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுக்கு சில சலுகைகள் உள்ளன: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, 7 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 3% வட்டி தள்ளுபடி வழங்கப்படும். சிறு, குறு விவசாய நிறுவனங்களுக்கு ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு அரசே உத்தரவாதம் அளிக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி..?
விண்ணப்பதாரர்கள், தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது நபார்டு வங்கி மேலாளர்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், விரிவான திட்ட அறிக்கையுடன் https://agrinfra.dac.gov.in/ என்ற இணையதள முகவரியில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.