மத்திய அரசு அறிமுகம் செய்த சுங்கச் சாவடிகளில் 3000 ரூபாயில் சிறப்பு வருடாந்திர பாஸ் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள், 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பாஸ் வாங்கினால், ஓராண்டில், 200 சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும் என்ற அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, ஆகஸ்ட் 15 முதல் செயல்படுத்த உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று முதல் இந்த திட்டம் நடை முறைக்கு வருகிறது.
ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் எப்படி பெறுவது?
இந்த ஆண்டு பாஸ் பெறுவதற்கு முதலில் வாகனமும், அதனுடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக் தகுதியும் சரிபார்க்கப்படும். பின்னர் ரூ.3 ஆயிரம் கட்டணத்தை ‘ராஜ்மார்க்யாத்ரா’ செல்போன் செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். 2 மணி நேரத்திற்குள் ‘பாஸ்’ செயல்படுத்தப்படும். இந்த பாஸ், தனியார் கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே பொருந்தும். வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களில் பயன்படுத்தினால், முன் அறிவிப்பு இல்லாமல் உடனடியாக பாஸ் செயலிழக்கப்படும்.
இந்த ஆண்டு பாஸ் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்குப் பொருந்தாது. இது தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச்சாலையில் மட்டுமே செல்லுபடியாகும். எனினும், பயனர்கள் தங்கள் ஃபாஸ்டேக் மூலம் மாநில மற்றும் பிற சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த முடியும். ஆனால் ஆண்டு பாஸ் கணக்கிலிருந்து பணம் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டாக் கட்டண முறை அமலுக்கு வந்த பிறகு வாகன ஓட்டிகளின் பிரச்சினை வெகுவாகக் குறைந்துள்ளது. சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சிரமம் குறைந்துள்ளது. ஆனாலும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கவலையில் இருந்தனர். அடிக்கடி பயணம் செய்பவர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியிருந்தது. இதுபோன்ற சூழலில் குறைந்த செலவில் இந்த வருடாந்திர பாஸ் அறிமுகம் செய்யப்படுவது வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: அடுத்த 24 மணி நேரத்தில்… வானிலை மையம் கொடுத்த கனமழை எச்சரிக்கை…!