ஆகஸ்ட் 15, 2025 அன்று தொடங்கப்படும் FASTag வருடாந்திர பாஸ், நெடுஞ்சாலை பயணத்தை மிகவும் மலிவு விலையிலும் தொந்தரவு இல்லாததாகவும் மாற்றும் மத்திய அரசின் ஒரு முயற்சியாகும்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த இந்த திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) செயல்படுத்த உள்ளது.
இந்த ப்ரீபெய்டு டோல் திட்டம், தனியார் வாகன உரிமையாளர்கள் ரூ. 3,000 என்ற நிலையான கட்டணத்தில் 200 கட்டணமில்லா பயணங்களைப் பெற அல்லது அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள் (NH) மற்றும் தேசிய விரைவுச்சாலைகள் (NE) முழுவதும் ஒரு வருட வரம்பற்ற அணுகலை அனுபவிக்க அனுமதிக்கிறது.
அடிக்கடி பயணிப்பவர்களை இலக்காகக் கொண்ட FASTag வருடாந்திர பாஸ், டிஜிட்டல் டோல் கட்டணங்களை ஊக்குவித்தல், டோல் பிளாசாக்களில் நெரிசலைக் குறைத்தல் மற்றும் நீண்ட தூர நெடுஞ்சாலை பயணிகளுக்கு கணிசமான செலவு சேமிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி திட்டம் அறிமுகமானது முதல் மாலை 7 மணி வரை 1.4 லட்சம் பயனர்கள் ஆண்டு பாஸ் வாங்கினர். அதேநேரத்தில், 1.39 லட்சம் பரிவர்த்தனைகள் பதிவாகின. ஒரே நேரத்தில் 20,000 – 25,000 பயனர்கள் ராஜ்மார்க்யாத்ரா செயலியைப் பயன்படுத்தியதாக NHAI தெரிவித்துள்ளது..
பாஸ் வைத்துள்ளவர்களுக்கு சுங்கக் கட்டணம் கழிக்கப்படவில்லை என்ற குறுஞ்செய்திகள் நேரடியாக வந்து சேர்வதால், திட்டத்தில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் தனித்தனி NHAI அதிகாரிகள் மற்றும் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயனர்களின் சந்தேகங்களை தீர்க்க 1033 தேசிய நெடுஞ்சாலை உதவி எண் வலுப்படுத்தப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டு பாஸ் கட்டணம் மற்றும் செல்லுபடியாகும் விதிமுறை:
* ரூ.3,000 ஒருமுறை கட்டணம் செலுத்தினால், ஒரு வருடத்திற்கு அல்லது 200 சுங்கச்சாவடி பயணங்களுக்கு செல்லுபடியாகும்.
* செல்லுபடியாகும் ஃபாஸ்டேக் கொண்ட வணிகம் அல்லாத அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும்.
* ராஜ்மார்க்யாத்ரா செயலி அல்லது NHAI இணையதளம் மூலம் கட்டணம் செலுத்திய இரண்டு மணி நேரத்திற்குள் பாஸ் செயல்படும்.
* இந்த ஆண்டு பாஸ் தொகை, தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கே பயன்படுத்தப்படும்.
* எதிர்காலத்தில் தூர அடிப்படையிலான கட்டண முறையையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதால், சுங்கச் சேவைகள் மேலும் நவீனமயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடையற்ற, சிக்கனமான, சீரான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஆண்டு பாஸ் திட்டம் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.