வியாழக்கிழமை குரு பகவானின் அருளைப் பெறுவதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில், எந்த ஒரு புதிய கலையையும் கற்றுக்கொள்ளத் தொடங்குவது குருவின் அருளால் சிறப்பாக அமையும். தியானப் பயிற்சி, ஜோதிடம் பார்த்தல் மற்றும் ஆலய தரிசனம் போன்ற ஆன்மீக செயல்கள் தொடங்கவும் இது ஒரு சிறந்த நாள்.
வாரத்தின் 7 நாட்களில் வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள். எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகுந்த நன்மைகளைத் தரும். 3 ஆண்டுகள் இந்த விரதத்தை முறையாகக் கடைபிடிப்பவர்களுக்கு குரு பகவானின் முழுமையான அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வியாழக்கிழமை விரதம் மேற்கொள்ளும் நாளில், அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். எதுவும் உண்ணாமல் அருகில் உள்ள கோவிலில் உள்ள நவகிரக சந்நிதிக்குச் சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிறப் பூக்கள், இனிப்புகள், சந்தனம் மற்றும் குங்குமப்பூ கலந்த பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பது நல்லது. அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்களை உச்சரிப்பது பலன் தரும். மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் ஆடைகளை ஏழைகளுக்கு தானம் செய்வது சிறந்தது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
குரு பகவானுக்குரிய இந்த விரதத்தை முறையாகக் கடைபிடிப்பவர்களுக்கு வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும். சரியான நேரத்தில் திருமணம் நடைபெறும், ஜாதகத்தில் உள்ள குரு தோஷங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் குறைவாக உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிப்பதன் மூலம் செல்வ வளம் பெருகும். மேலும், எதிர்பாராத நல்ல வாழ்க்கை அமையவும் இது வழிவகுக்கும்.
Read More : குலதெய்வத்தின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா..? குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்..?