கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய வியாபாரி சுரேந்திரன், தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கொச்சி அருகே உள்ள குன்னத்துநாடு, வெங்கோலா பகுதியில் வசித்து வந்தார். அடுத்த ஒரு வாரத்தில் அவரது மகளுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அதற்காக வீட்டில் சுமார் 15 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சுரேந்திரன் திடீரென மாயமானார். அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்ததால், அவர் எங்கு சென்றார் என்று தெரியாமல் குடும்பத்தினர் குழப்பமடைந்தனர். சுரேந்திரன் காணாமல் போன நிலையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் ரொக்கமும், 15 சவரன் நகைகளும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
மகள் திருமணத்திற்காக வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை சுரேந்திரனே எடுத்துச் சென்றதை அடுத்து, குடும்பத்தினர் எர்ணாகுளம் புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சுரேந்திரனை தீவிரமாகத் தேடத் தொடங்கினர். தேடுதல் வேட்டையில், 2 நாட்களுக்கு முன் சுரேந்திரனின் செல்போன் ஆன் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் காவல்துறையினர் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து வந்த அழைப்புகளை ஏற்கவில்லை.
இந்நிலையில், வேறொரு எண்ணில் இருந்து தனது மகளின் செல்போனுக்கு தொடர்புகொண்ட சுரேந்திரன், தான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்து, தன்னைத் தேட வேண்டாம் என்று கூறியுள்ளார். மகள் கதறி அழுது திருமணத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டதால், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இதற்கிடையே, சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் சுரேந்திரனின் இருப்பிடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தது தெரியவந்தது. அங்கு விரைந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். அவருடன் ஒரு பெண் இருந்ததும், அவர் சுரேந்திரனின் கள்ளக்காதலி என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையினர் சுரேந்திரனைக் கைது செய்து, அவரிடமிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.70 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர். அவரது கள்ளக்காதலியை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மகள் திருமணத்தின் முன் நடந்த இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! யாருக்கெல்லாம் கிடைக்கும்..? உடனே அப்ளை பண்ணுங்க..!!



