மும்பை நகரின் கோரேகான் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர், அருகில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி வழக்கம்போல, தனது பாட்டியுடன் பள்ளிக்கு சென்றார். ஆனால், பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சிறுமி, திடீரென பிறப்புறுப்பில் வலி இருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் துன்புறுத்தலை அனுபவித்திருப்பதாக கூறி சிகிச்சை அளித்தனர். பின்னர், இந்த சம்பவத்திற்கு பள்ளியில் உள்ள ஒரு பெண் ஊழியர் தான் காரணம் எனக் கருதி பள்ளி நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் குறித்து முழுமையான தகவலை பெற்ற போலீசார், உடனே சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். மேலும், பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, 3 பெண் ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர்களில் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பள்ளியில் பணியாற்றி வருவதாகவும், சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக ஒப்புக்கொண்டார். மேலும், சிறுமியின் பெற்றோரின் வாக்குமூலம் மற்றும் மருத்துவ அறிக்கைகள் அடிப்படையாகக் கொண்டு, போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.