பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்..
இந்த சூழலில் நேற்று அன்புமணியை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார்… 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் உரிய விளக்கம் அளிக்காததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.. அன்புமணி உடன் பாமகவினர் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனவும் ராமதாஸ் கூறியிருந்தார்.
ஆனால், ராமதாஸின் அறிவிப்பு அன்புமணியை கட்டுப்படுத்தாது என்றும். பாமக தலைவர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை எனவும் அன்புமணி தரப்பு கூறியது.. மேலும் ராமதாஸ் பாமகவின் நிறுவனர் மட்டுமே அந்த நிலையில், கட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது..
இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்களிடையே இன்று மோதல் வெடித்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வன்னியர் சங்க கட்டிடம் இயங்கி வருகிறது.. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டமர் 17-ம் தேதி, வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்துவது வழக்கம்..
அந்த வகையில் வரும் 17-ம் தேதி அன்புமணி ராமதாஸ் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் வன்னியர் சங்க அலுவலகத்திற்கு ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.. இன்று ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது..
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் திண்டிவனம் காவல் நிலையத்திலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.. இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் போலீசார் தலையிட்டு சமாதானம் செய்ய முயன்றனர்.. ஆனால் இரு தரப்பினரும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.. மேலும் இரு தரப்பினரும் மாறி மாறி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.. பின்னர் ஒரு வழியாக திண்டிவனம் டிஎஸ்பி இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததால் பதற்றம் தணிந்தது..



