விருப்ப மனு பெயரில் பண மோசடி செய்வதாக அன்புமணி மீது டிஜிபிக்கு இமெயில் மூலம் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் டிச.14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஒருவாரத்துக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.
தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் 20க்குள் பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கட்சியின்தலைவர் அன்புமணி அறிவித்திருந்தார். விருப்பமனு விநியோகம் என்ற பெயரில் பணமோசடியில் அன்புமணி ஈடுபடுவதாக அவரது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸ் தரப்பில் காவல்துறை டிஜிபிக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பாமகவின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் 17-ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, அடுத்தகட்ட செயல்பாடு, தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.



