சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இன்று சிவகாசி அருகே சின்னக்காம்பட்டியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இன்று காலை வழக்கம் போல் சுமார் 50 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். மருந்து கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.. மேலும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? என்று தேடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Read More : BREAKING| திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்ற முடியாது..!! – உச்சநீதிமன்றம்