வங்கதேசத்தின் வட டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி மீது வங்கதேச போர் விமானம் விபத்துக்குள்ளானது. உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி மீது விமானம் பிற்பகல் 1:30 மணியளவில் சீனாவில் தயாரிக்கப்பட்ட F-7 விமானம் மோதியது.. இந்த விபத்தின் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்..
இந்த விமான விபத்தை நேரில் பார்த்த, ஃபஹிம் ஹொசைன் என்ற 11-ம் வகுப்பு மாணவர் இதுகுறித்து பேசினார். அப்போது ” ஜெட் விமானம் என் கண்களுக்கு முன்பு, எனக்கு 10 அடி முன்னால் விபத்துக்குள்ளானது. மதியம் 1:15 மணியளவில் இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தின் மீது மோதி விழுந்து நொறுங்கியது.. அங்கு முதன்மைப் பிரிவுக்கான வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன,” என்று கூறினார்.
முதலாம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர் அரிஃபுல் இஸ்லாம் பேசிய போது, ஒரு கட்டிடத்தின் 7வது மாடியில் இருந்ததாகவும், ஜன்னலுக்கு வெளியே பார்த்ததாகவும், திடீரென அருகிலுள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் விமானம் மோதியதைக் கண்டதாகவும் கூறினார், அங்கு ஜூனியர் மாணவர்கள் வகுப்பில் இருந்தனர்.
“அப்போது பலத்த சத்தம் கேட்டது.. முழுப் பகுதியும் தீப்பிழம்புகள் பரவியது.., மேலும் கட்டிடத்திலிருந்து அலறல்கள் வரத் தொடங்கின. நாங்கள் அவசரமாக எங்கள் கட்டிடத்தை காலி செய்தோம்,” என்று கூறினார்.
அந்த நேரத்தில் வளாகத்தில் இல்லாத ஒரு மாணவி ரஃபிகா தாஹா பேசிய போது “ இந்தப் பள்ளி தொடக்கப்பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 2,000 மாணவர்களைக் கொண்ட வகுப்புகளை வழங்குகிறது.. நான் தொலைக்காட்சியில் வீடியோக்களைப் பார்த்து நான் பயந்தேன். கடவுளே! இது எனது பள்ளி,” என்று பயந்து போய் தெரிவித்தார்..
வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இந்த விமான விபத்து குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “விமானப்படை, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரியின் ஊழியர்கள் மற்றும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது.” என்று குறிப்பிட்டுள்ளார்..
விமான விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.