கோவை மாநகரின் பரபரப்பான சிங்காநல்லூர் பகுதியில், மக்கள் சிவராத்திரி வழிபாடுகளில் மூழ்கியிருந்த நள்ளிரவு நேரத்தில், அடகு கடை ஒன்றின் பூட்டை உடைத்து சுமார் 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நிறைந்த திருச்சி சாலையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், அப்பகுதி வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர் வசந்தா மில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார், திருச்சி சாலையில் ‘மகாதேவ்’ என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த ரமேஷ்குமார், தனது குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றுள்ளார். உரிமையாளர் இல்லாத இந்த நேரத்தை நன்கு நோட்டமிட்ட கொள்ளையர்கள், நேற்று இரவு 11 மணியளவில் கடையின் பின்பக்க கதவை குறிவைத்துள்ளனர்.
பின்பக்க ஷட்டரின் பூட்டை மிகவும் லாவகமாக உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், கல்லாவிலிருந்த சுமார் 100 சவரன் தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகளைச் சுருட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடியது. கோவிலிலிருந்து திரும்பிய ரமேஷ்குமார், கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில், சிங்காநல்லூர் போலீசார் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் தடயங்களைச் சேகரித்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
திட்டமிட்டபடி இந்தக் கொள்ளை நடந்திருப்பதால், இதில் ஏதேனும் உள்ளூர் நபர்களுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மர்ம நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீசார், கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Read More : அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கோடைக்கால சிறப்பு உதவித்தொகை..!! வெளியான செம குட் நியூஸ்..!!



