இந்தியாவில் இயங்கும் இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய முக்கிய விமான நிறுவனங்களின் சேவைகள், ஏர்பஸ் விமானங்களில் ஏற்பட்டுள்ள மென்பொருள் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட உள்ளன. சூரியக் கதிர்வீச்சினால் விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளில் உள்ள தகவல் பாதிக்கப்படலாம் என்று ஏர்பஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் இயக்கப்படும் சுமார் 560 ஏ320 குடும்ப ரக விமானங்களில், 200 முதல் 250 விமானங்கள் வரை உடனடியாக மென்பொருள் அப்டேட் அல்லது வன்பொருள் சீரமைப்புச் செய்யப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனம் (EASA) ஒரு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில், விமானத்தின் எலிவேட்டர் ஏலெரான் கம்ப்யூட்டரில் (ELAC) கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதால், இது விமானத்தின் அசைவுகளைக் கட்டுப்படுத்தும் முக்கியச் செயல்பாடுகளைப் பாதிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்களின் பதில் : இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி, தங்கள் விமானங்களில் இந்தச் சீரமைப்புப் பணிகளை முன்னெச்சரிக்கையுடன் செய்து வருவதாக தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, சில விமானங்களின் சேவை அட்டவணையில் தாமதங்கள் அல்லது மாற்றங்கள் ஏற்படலாம் என்று பயணிகளுக்கு அறிவித்துள்ளன.
பயணிகள் பாதிப்பு : ஏ320 ரக விமானங்கள் தான் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் முக்கியமானவை என்பதால், இந்தப் பணிகள் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சீரமைப்புகள் பயணிகளுக்குச் சிரமத்தை அளித்தாலும், விமானங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை கட்டாயம் என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More : உங்கள் ஆதாரில் முகவரி தவறாக உள்ளதா..? அதை மாற்றாவிட்டால் பின்விளைவுகளை சந்திப்பீர்கள்..!!



