தமிழக மற்றும் புதுவை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய கைது நடவடிக்கைகள் மற்றும் படகுப் பறிமுதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டி, தமிழக மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதுடன், அவற்றைப் பின்னாளில் அந்நாட்டு அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகள் மீனவக் குடும்பங்களை நிலைகுலையச் செய்துள்ளன.
குறிப்பாக, கடந்த மாதம் 28-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும், அதனைத் தொடர்ந்து 30-ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 11 மீனவர்களை எல்லைத் தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 11 மீனவர்கள் தமிழகத்தின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், ஒரு வார காலத்திற்குள் அடுத்தடுத்து 17 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



