தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முகாம் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கியப் புள்ளியான குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உட்கட்சி பூசல் மற்றும் ஓபிஎஸ் அணியில் நிலவும் தெளிவற்ற அரசியல் சூழலால், அடுத்தடுத்து முன்னணி நிர்வாகிகள் ஆளுங்கட்சியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்றோர் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து, சமீபத்தில் வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்து திமுகவில் இணைந்தார். அந்த வரிசையில் தற்போது பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான குன்னம் ராமச்சந்திரன், வரும் ஜனவரி 26ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனி ஒருவராக இல்லாமல், தன்னுடன் சுமார் 250 முக்கிய நிர்வாகிகளையும் திமுகவுக்கு அழைத்துச் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
2016-இல் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய குன்னம் ராமச்சந்திரன், 2021 தேர்தலிலும் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றியை தவறவிட்டவர். ஓபிஎஸ்-ன் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட இவர், தற்போது நிலவும் அரசியல் தேக்கநிலை மற்றும் முடிவுகள் எடுப்பதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக தனது அரசியல் எதிர்காலத்தை கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Read More : ஒரே மாதத்தில் ரூ.1 லட்சத்திற்கு மேல் உயர்ந்த வெள்ளி விலை..! இனியாவது குறையுமா? நிபுணர்கள் பதில்..!



