சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பகுதிகளில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மிரட்டலால் விமான நிலையத்தின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டன. அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணப் பெட்டிகள் தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டன. மேலும், விமான நிலைய வளாகம் முழுவதும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் சல்லடை போட்டு தேடினர்.
அண்மையில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது விமான நிலையத்திற்குக் கிடைத்திருக்கும் இந்த மிரட்டல், பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீவிரச் சோதனைகளால், பல விமானங்களின் புறப்பாடு தாமதமானது. குறிப்பாக, ஃபிராங்க்ஃபர்ட், துபாய் மற்றும் கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருந்த சர்வதேச விமானங்கள் தாமதமானதால், பயணம் செய்யக் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால், பயணிகள் மத்தியில் குழப்பமும் சலசலப்பும் நிலவியது.
இந்த மிரட்டல் குறித்து தகவல் கொடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்தும், இந்த மிரட்டல் உண்மையானதா அல்லது புரளியா என்பது குறித்தும் காவல்துறையினர் மற்றும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதலாகப் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.



