தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். அண்மையில் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்திற்கும் மிரட்டல் வந்தது. ஆனால், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மற்றும் போலீசார் நடத்திய சோதனைக்குப் பிறகு, இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் வெறும் புரளி என்பதை உறுதி செய்தனர். இந்த மிரட்டல் தற்போது ஊடகத் துறைக்கும் பரவியுள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கி வரும் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான புதிய தலைமுறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்தவுடன், அலுவலகத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவினருடன் இணைந்து போலீசார் அலுவலக வளாகம் முழுவதையும் சல்லடை போட்டுத் தேடினர். ஆனால், இந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இந்த சூழலில் தான், சென்னை துரைப்பாக்கம், சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. துரைப்பாக்கத்தில் உள்ள ஒன் ஐடி கேம்பஸ் கட்டிடத்திற்கும், சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பணிக்கு வந்த ஊழியர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு ஐடி நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
Read More : பொங்கல் பண்டிகைக்கு ரூ.5,000 உறுதி..? யாருக்கெல்லாம் கிடைக்கும்..? CM ஸ்டாலின் போட்ட மெகா பிளான்..!!