சமீப காலமாக தமிழ்நாட்டில் பிரபலங்களின் வீடுகளை குறிவைத்து, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் தலைவர்கள் முதல் முக்கியப் புள்ளிகள் வரை இந்த மிரட்டல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த வரிசையில், அண்மையில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்-யின் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்திற்கும் இதேபோன்று மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். எனினும், இந்த அனைத்து மிரட்டல்களும் வெறும் புரளி என்று இறுதியில் தெரிய வந்தது.
இந்நிலையில், தற்போது இந்த மிரட்டல் கலாச்சாரம் ஊடகத் துறைக்கும் பரவியுள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் செய்தி தொலைக்காட்சியான புதிய தலைமுறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மிரட்டல் குறித்து தகவல் கிடைத்தவுடன், அலுவலகத்தில் இருந்த அனைத்து ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவினருடன் போலீசார் இணைந்து அலுவலக வளாகம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு, இந்த மிரட்டலும் வெறும் புரளிதான் என்று காவல்துறை தெரிவித்தது. அரசியல் தலைவர்கள், பிரபலங்களைத் தொடர்ந்து தற்போது ஊடக அலுவலகங்களுக்கும் இதுபோன்று மிரட்டல் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : இந்தியாவிலேயே முதல்முறை..!! டைனிங் டேபிளில் உணவு சாப்பிட்டுக் கொண்டே தியேட்டரில் படம் பார்க்கலாம்..!!