தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் கொங்கு மண்டலத்தின் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (டிசம்பர் 18) ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே உள்ள சுங்கச்சாவடிப் பகுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும், பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்யவும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் விஜயமங்கலம் வந்தனர்.
அப்போது, புஸ்ஸி ஆனந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் நிகழ்வின்போது எதிர்பாராதவிதமாக சலசலப்பு ஏற்பட்டது. ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட செயலாளர்கள், பொதுச் செயலாளருக்கு ‘யார் முதலில் மாலை அணிவித்து வரவேற்பு அளிப்பது’ என்ற போட்டியில் ஈடுபட்டனர். இது ஆரம்பத்தில் வாக்குவாதமாக தொடங்கி, இறுதியில் இரு தரப்பு நிர்வாகிகளிடையே சிறிய மோதலாக வெடித்தது. உடனடியாக அங்கிருந்த பிற கட்சி நிர்வாகிகள் தலையிட்டு சண்டையை தடுத்து நிறுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த கசப்பான அனுபவத்தை அடுத்து, தற்போது நடைபெறும் ஈரோடு கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை மிக கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக காவல்துறை மொத்தம் 84 நிபந்தனைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : உங்கள் மரணத்தை துல்லியமாக சொல்லும் அதிசய கோயில்..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?



