தமிழ் சினிமாவின் ‘இமயமலை’ என்று போற்றப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த பாரதிராஜா, சமீபத்தில் சென்னை திரும்பிய நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த மாத இறுதியில் மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராகவும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுவினர் அவருக்குத் தொடர்ந்து உரிய சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், “அவர் நலமாக உள்ளார். தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என மருத்துவமனை நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் அவர் விரைவில் முழு நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.
Read More : FLASH | பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா..? தொடங்கியது ரயில் டிக்கெட் முன்பதிவு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!



