தமிழ்நாட்டில் இன்னும் 5 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆளும் திமுக ஒருபுறம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி, மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
மறுபுறம், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக எப்படியும் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த இரண்டு பெரிய கட்சிகளின் போட்டிகளுக்கு நடுவே, நடிகர் விஜய்யும் அரசியல் களத்தில் இருப்பதால், 2026 தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், கடந்த சில நாட்களாகவே பிற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், சுமார் 2,000 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கடந்த மாதம் 13ஆம் தேதி திமுகவில் இணைந்த, அதிமுகவின் முன்னாள் ஓசூர் மாநகரக் கிழக்கு மண்டலக் குழுத் தலைவர் புருஷோத்தம ரெட்டி தலைமையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கே.பி. முனுசாமி மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளை அடையாளம் கண்டு, அவர்களைத் திமுகவில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் தீவிரமாக நடத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, மற்ற கட்சிகளின் நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதன் மூலம் திமுக தனது தேர்தல் பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது.
Read More : மாதம் ரூ.30,000 வரை சம்பளம்..!! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் கூட போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!



