தமிழக அரசியல் களத்தின் மூத்த தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தூண்களில் ஒருவருமான கே.லிங்கமுத்து (75), உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.6) காலமானார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், குடியாத்தம் (தனி) தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றவர் கே. லிங்கமுத்து. தனது பதவிக்காலத்தில் அந்தத் தொகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் அந்தப் பகுதி மக்களால் நினைவுகூரப்படுகின்றன.
அரசியல் பணிகளை தாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்த லிங்கமுத்து, கட்சியின் கொள்கைப் பிடிப்போடு இறுதிவரை பயணித்தவர். குறிப்பாக, வேலூர் மாவட்டத்தின் முக்கியத் தொழில்களான விவசாயம் மற்றும் பீடி தொழிலில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தி அறிந்தவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் குடியாத்தம் தொகுதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



