ராமதாஸும் அன்புமணியும் இணைவார்கள் எனில் கட்சியை விட்டு விலக தயார் என ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது..
இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் “ பாமக என்பது அங்கீகரிக்கப்படாத கட்சி.. அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்த வரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது.. உள்கட்சி விவகாரத்தில் கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது.. கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் தீர்வு வேண்டுமானால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று ராமதாஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது..
இதையடுத்து அன்புமணி தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணம் கொடுத்துள்ளார்.. எனவே அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி ராமதாஸ் தரப்பு டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது. இந்த சூழலில் துரோகிகள் இருக்கும் வரை ஒன்றிணைய முடியாது என்று அன்புமணி கூறியிருந்தார்.
இந்த நிலையில் அன்புமணியின் இந்த குற்றச்சாட்டுக்கு ராமதாஸ் தரப்பை சேர்ந்த ஜி.கே மணி விளக்கம் அளித்துள்ளார்.. ஜி.கே மணி இன்று செய்தியாளர்களை சந்தித்த போது “ தந்தையையும் மகனையும் பிரித்துவிட்டதாக மனசாட்சி இல்லாமல் அன்புமணி பேசுகிறார்.. அன்புமணியை வளர்த்துவிட வேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் அழைத்து சென்று அறிமுகப்படுத்தினேன்.. பாமகவில் ஏற்பட்ட பிரச்சனைக்கு அன்புமணி தான் காரணம், அவரது செயல்பாடுகளால் ராமதாஸ் கண்ணீர் வடித்தார்.. மனதளவில் கூட துரோகம் நினைக்காத என்னை துரோகி என்று அன்புமணி பேசுகிறார்.. இது மிகவும் வருத்தமாக உள்ளது.. பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு நான் தான் காரணம் என்றும் அன்புமனி பேசியிருக்கிறார்.. அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும்; மத்திய அமைச்சராக வேண்டும் என பேசியது நான் தான்.. என் அப்பா ராமதாஸுக்கு அடுத்ததாக உங்களை தான் நினைக்கிறேன் என்று கூறியவர் அன்புமணி..
பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் இருந்து செயல்படுவதால் என்னை துரோகி என்று அன்புமணி கூறுகிறார்.. அன்புமணியை மத்திய அமைச்சராக்க கூடாது என உறுதியாக இருந்தவர் காடுவெட்டி குரு.. ராமதாஸ் உடன் இருப்பவர்களை துரோகி என அன்புமணி அவமானப்படுத்துகிறார்.. ராமதாஸை கொல்லுங்கள் என பதிவிட்டவரை அழைத்து பாராட்டினார் அன்புமணி..
அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியை கூட கடுமையாக விமர்சித்தவர் அன்புமணி.. ராமதாஸை மட்டுமல்லாது கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி. ராமதாஸ் உடன் இருந்தால் அவர்கள் அனைவரும் துரோகிகளா? அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடிகளை சொல்லி மாளாது.. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை கெடுத்தது நான் தான் என்றும் அன்புமணி அவதூறாக பேசினார்.. ஆட்சி மாற்றம் காரணமாக 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு நான் எப்படி காரணமானேன்.
ராமதாஸும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேற தயார். நானும் எனது குடும்பத்தினரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார்.. துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.” என்று தெரிவித்தார்..
Read More : தனிக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்..!! யாருடன் கூட்டணி..? டிச.23ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!



