கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை மேம்பாலத்தில் நிகழ்ந்த விபத்தில், தம்பதியினருடன் சேர்த்து அவர்களது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது கைக்குழந்தையுடன் ஸ்கூட்டரில் நேற்று இரவு பயணம் செய்துள்ளனர். லாலாபேட்டை மேம்பாலத்தை கடக்க முயன்றபோது, எதிரே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்ட மூவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் விரைந்து வந்து, சடலங்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை 3 பேர் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையே இந்த விபத்திற்குக் காரணமா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



