தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தி வரும் பிரச்சாரக் கூட்டத் தொடரின் 3ஆம் கட்டம் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடந்தது. ஆனால், கரூரில் கட்டுக்கடங்காத கூட்டத்தால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் பிரச்சாரத்துக்காக தொண்டர்களும் ரசிகர்களும், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும், அதிகாலை முதலே திரண்டு இரவு வரை காத்திருந்தனர்.
விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து வர, வழிநெடுகிலும் திரண்டிருந்த கூட்டம் காரணமாக, 1.5 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவே 1.5 மணி நேரம் பிடித்தது. அவர் இரவு 7 மணிக்கு மேலேயே பிரசார இடத்தை வந்தடைந்தார். கட்டுக்கடங்காத கூட்டம், விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் மற்றும் ஏற்கனவே திரண்டிருந்தவர்கள் என ஏற்பட்ட கடும் நெரிசலால் அந்தப் பகுதி கலவர பூமியானது.
இதில், மயக்கமடைந்த 50-க்கும் மேற்பட்டோரை உறவினர்களும் அருகில் இருந்தவர்களும் உடனடியாக தனியாா் மருத்துவமனைகளுக்குக் கதறியழுதவாறு தூக்கிச் சென்றனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து அவர்களைப் போர்க்கால அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றன. அங்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 10 குழந்தைகள், 17 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் உட்பட மொத்தம் 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். இந்த கூட்ட நெரிசலுக்கான காரணம் என்ன..? பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தது..? உயிரிழந்தவர்கள் இறந்ததற்கான காரணம் என்ன..? பிரேத பரிசோதனை அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது..? என்பது குறித்து விரிவான அறிக்கை வேண்டுமென முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் கேட்டுள்ளார்.