ஒடிசாவின் கட்டக்கில் உள்ள SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அதிர்ச்சி சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீவிபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்தத் தீ விபத்து, அப்பிரிவின் முதல் தளத்தில் ஏற்பட்டது; அங்கு 23 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். ஒடிசாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்..
மேலும் தீ விபத்தில் படுகாயமடைந்த 5 நோயாளிகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர்.. மேலும் மருத்துவமனை ஊழியர்களும் அவசர மீட்புக் குழுவினரும் பாதிக்கப்பட்ட வார்டில் இருந்த நோயாளிகளைப் பாதுகாப்பாகப் பிற பிரிவுகளுக்கு மாற்றினர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, இந்தத் தீ விபத்து குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், விபத்தில் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
நேற்று ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வீசிய ‘நார்வெஸ்டர்’ (Nor’wester) எனப்படும் பலத்த காற்றுடன் கூடிய புயலால் இரண்டு பேர் உயிரிழந்தும், 17 பேர் காயமடைந்தும், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது.. அதற்கு அடுத்த நாளே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூறாவளி போன்ற அந்தப் புயல் அமைப்பு, தேசிய நெடுஞ்சாலை (NH)-220 அருகே பிற்பகல் 4 மணியளவில் வீசியதில் அந்த இரண்டு நபர்களும் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 5 பேர் கேந்துஜார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலத்த காற்றின் காரணமாகப் பல மரங்களும் மின் கம்பங்களும் வேரோடு சாய்ந்ததாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். இதுதவிர, இந்தப் பேரிடரில் மேலும் சுமார் 40 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.
‘கியா’ மற்றும் ‘கன்கடா’ ஆகிய கிராமங்கள் இந்தச் சூறாவளி போன்ற புயலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கன்கடா கிராமத்தில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், அங்கிருந்த ஒரு ஆட்டோ ரிக்ஷாவும் ஒரு ஸ்கூட்டரும் காற்றில் பறந்து சென்று, அருகிலிருந்த நீர்நிலைக்குள் விழுந்ததாக கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.
உள்ளூர் நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை மேற்பார்வையிடத் தொடங்கினர். கரஞ்சியா துணை ஆட்சியர் அலுவலகத்தின் ‘பஞ்ச்பீர்’ பிரிவைச் சேர்ந்த கஸ்தூரி பாண்டா, மருத்துவமனைக்கும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும் நேரில் சென்று நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். தீயணைப்புத் துறை வீரர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும் ஈடுபட்டனர்.
மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மாஜி அறிவித்ததாக, மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியர் ஹேமகந்தா சோய் தெரிவித்தார்.



