இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் முக்கியமான ஆளுமையுமான ஆர்.நல்லகண்ணு (101), உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது இல்லத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. அதற்கான தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு, நேரடியாக உணவு உட்கொள்வதில் சிரமம் இருந்ததால், வயிற்றுப் பகுதியில் குழாய் பொருத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டு வந்தது.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகும், வயது முதிர்வு மற்றும் நுரையீரல் சார்ந்த உபாதைகள் காரணமாக அவருக்குச் சுவாச சீரமைப்புக்காகத் தொண்டையில் ‘டிரக்யாஸ்டமி’ குழாய் பொருத்தப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை அன்று அவருக்குத் திடீரென சிறுநீரகத் தொற்று (Urinary Infection) பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவர் மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு, நல்லகண்ணு அவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 100 வயதை கடந்த நிலையிலும் பொதுவாழ்வில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த மூத்த தலைவரின் உடல்நிலை குறித்து, அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.



