தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும் பேச்சாளர் என பெயரெடுத்த காளியம்மாள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ஓராண்டு காலம் கடந்த நிலையில், தற்போது தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஓராண்டாக திமுக, தவெக, பாஜக என பல்வேறு கட்சிகளுடன் அவர் இணையப் போவதாகப் பல ஊகங்கள் வெளிவந்த நிலையில், இன்று அவர் அதிமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாதக-வில் சீமானின் மனைவி கயல்விழிக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்ட விவகாரத்தில் அதிருப்தி அடைந்த காளியம்மாள், அக்கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியேறினார். நாகை மாவட்டத்தின் எளிய மீனவக் குடும்பத்திலிருந்து வந்த இவர், சுனாமி பாதிப்பின் துயரங்களை நேரில் கண்டவர். நாம் தமிழர் கட்சியின் முக்கிய அடையாளமாக திகழ்ந்த காளியம்மாள், 2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் மைக் சின்னத்தில் போட்டியிட்டு 1.25 லட்சம் வாக்குகளைப் பெற்று, அக்கட்சியின் வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகளை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியிலிருந்து விலகிய பிறகு தவெக அல்லது பாஜக-வில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் அதிமுக-வின் ‘இரட்டை இலை’ சின்னத்தைத் தேடிச் செல்ல முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மீனவர் நலன் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த களப்பணிகளில் அனுபவம் வாய்ந்த காளியம்மாளின் வருகை, டெல்டா மாவட்டங்களில் அதிமுக-வுக்குக் கூடுதல் பலத்தை சேர்க்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்தத் தகவல் குறித்துக் காளியம்மாள் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ மறுப்பையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : வீட்டில் இந்த திசையில் விளக்கு ஏற்றினால், செல்வம் பெருகும்..! இந்த ஒரு விஷயத்தை செய்தால் போதும்!



