அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்சியின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்காக 10 நாட்கள் காலக்கெடுவும் விதித்தார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன் திடீரென டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். செங்கோட்டையன் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும் அவசரமாக டெல்லிக்கு கிளம்பினார்.
டெல்லி சென்ற அவர், புதிதாக பொறுப்பேற்றிருக்கும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர், இரவு நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர். அமித் ஷாவின் இல்லத்திலேயே இரவு விருந்தும் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தனது முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு வெளியே வந்ததால், அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் அமித் ஷாவுடனான சந்திப்புப் புகைப்படங்களைப் பதிவிட்டு, முத்துராமலிங்கத் தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
இருப்பினும், இந்தச் சந்திப்பின் உண்மையான காரணம் குறித்துப் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் மீதான அமலாக்கத்துறை வழக்குகளை தேர்தலுக்கு முன்னால் விரைவாக விசாரிக்க உத்தரவிடுமாறு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீதான வெளிநாட்டு கார் இறக்குமதி வழக்கு, டாஸ்மாக் மற்றும் மணல் முறைகேடு வழக்குகளையும் விரைந்து விசாரிக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, என்.டி.ஏ. கூட்டணியில் மட்டும் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்களில் கூட்டணியின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என அமித்ஷா கூறியதை அடுத்து இபிஎஸ் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதனால், பாஜக தேசிய தலைமை மீண்டும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Read More : வந்தாச்சு அறிவிப்பு..!! “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தில் 10,000 வீடு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!