தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் கறையாக படிந்துள்ள கரூர் வேலுசாமிபுரம் சம்பவம் தொடர்பான விசாரணை, இப்போது டெல்லி சிபிஐ (CBI) தலைமையகத்தில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் ஒரு பகுதியாக, தவெக தலைவர் விஜய்க்கு அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று, அவர் நேற்று தனி விமானம் மூலம் டெல்லி சென்று விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜரானார்.
டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில், 4 பேர் கொண்ட உயரதிகாரிகள் குழு சுமார் 100-க்கும் மேற்பட்ட அடுக்கடுக்கான கேள்விகளை விஜய்யிடம் முன்வைத்ததாக தெரிகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் டெல்லியில் முகாமிட்டுள்ள விஜய்யிடம் நடத்தப்பட்ட இந்த விசாரணை சுமார் பல மணி நேரம் நீடித்தது. அப்போது அந்த இடத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட மேலாண்மை மற்றும் விபத்து நடந்த சூழல் குறித்து அவரிடம் விரிவான விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.
விசாரணையின் போது விஜய் அளித்த வாக்குமூலங்கள் குறித்த சில தகவல்கள் தற்போது கசிய தொடங்கியுள்ளன. குறிப்பாக, இந்தச் சம்பவத்திற்குத் தமிழக அரசின் அலட்சியமே முழு முதற்காரணம் என விஜய் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரச்சாரம் நடந்த பகுதியில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் காவல்துறையினர் தவறிவிட்டதாகவும், அவர்களின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே தான் அங்கிருந்து பாதியிலேயே சென்னைக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் அதிகாரிகளிடம் விளக்கியதாக தெரிகிறது.
இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கட்சி நிர்வாகிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தி வந்த சிபிஐ, இப்போது நேரடியாக விஜய்யிடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 2026 தேர்தலை எதிர்நோக்கியுள்ள தவெக-விற்கு இந்த சட்டப் போராட்டமும், அதில் விஜய் எடுத்துள்ள நிலைப்பாடும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
Read More : FLASH | அடங்காத இலங்கை கடற்படை..!! தமிழக மீனவர்கள் 8 பேர் அதிரடி கைது..!! மீண்டும் பதற்றம்..!!



