ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து.. இந்தியாவிலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை? அரசு முக்கிய முடிவு..!

social media children

16 வயதுக்கு குறைந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக, தகவல் தொழில்நுட்ப விதிகள், .(Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021 என்ற விதிகளில் திருத்தம் செய்யப்படலாம் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (IT Ministry) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


“சில வகை கணக்குகளை குழந்தைகள் அணுகலாம். ஆனால் சில கணக்குகளை அவர்கள் அணுகக்கூடாது. குழந்தைகள் இவற்றை பயன்படுத்த வேண்டுமா, வேண்டாமா என்பதை மிகவும் கவனமாகவும் நியாயமாகவும் நாம் சிந்திக்க வேண்டும்,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்..

மத்திய அரசு ஆஸ்திரேலிய பின்பற்றும் முறையை ஆய்வு செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். இருப்பினும், ஆஸ்திரேலியா போல 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முழுமையான தடை விதிப்பது தற்போது பரிசீலனையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடக நிறுவனங்களுடன் ஆலோசனை: அஷ்வினி வைஷ்ணவ்

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு சமூக ஊடக நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் “ “வயதை அடிப்படையாகக் கொண்ட கட்டுப்பாடுகள் அவசியம் என்பதைக் பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இது எங்களின் DPDP (Digital Personal Data Protection) சட்டத்திலும் இடம் பெற்றுள்ளது. தற்போது, டீப் ஃபேக் (deepfake) பிரச்சனைகள் மற்றும் வயது சார்ந்த கட்டுப்பாடுகள் குறித்து சமூக ஊடக தளங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்தியாவில் தற்போது உள்ள சட்ட நிலை

இந்தியாவில், குறிப்பிட்ட ஒரு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக் கூடாது என்று நேரடியாகத் தடை விதிக்கும் சட்டம் தற்போது இல்லை.
ஆனால் டிஜிட்டல் தனியுரிமை தரவு பாதுகாப்பு (Digital Personal Data Protection (DPDP) விதிப்படி, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் தனிப்பட்ட தரவுகளை (personal data) செயலாக்குவதற்கு, சமூக ஊடக நிறுவனங்கள் கட்டாயமாக பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உறுதியான சம்மதத்தை பெற வேண்டும்.

இதன் மூலம், சிறார்களின் தரவை பெற்றோர் அனுமதி இல்லாமல் சேகரிக்க முடியாது. அதேபோல், அவர்களை இலக்காகக் கொண்டு விளம்பரங்கள் (targeted ads) காட்டவும் முடியாது. இது மறைமுகமாக சிறார்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்துகிறது.

உலக நாடுகளில் வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள்

உலகளவில், வயது அடிப்படையிலான சமூக ஊடக கட்டுப்பாடுகளுக்கு முன்மாதிரிகள் உள்ளன. ஆஸ்திரேலியா 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்த முதல் நாடாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் (15 வயதுக்கு கீழ்) இதேபோன்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை பரிசீலித்து வருகின்றன.

இந்தியாவிலும், கோவா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள், ஆஸ்திரேலியா மாதிரியான 16 வயதுக்கு கீழ் தடை முறையை பரிசீலித்து வருகின்றன. ஆனால் இதை நடைமுறையில் எவ்வாறு அமல்படுத்தப் போகிறார்கள் என்பது தெளிவாக இல்லை. மேலும், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கூட, மத்திய அரசு ஆஸ்திரேலியா போன்று ஒரு சட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

பொருளாதார ஆய்வு அறிக்கையின் எச்சரிக்கை

ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையும் டிஜிட்டல் தளங்களில் வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கிறது.
இளம் வயதினரிடம் அதிகமாகும் திரை (screen) பயன்பாடு, நாட்டிற்கு கணிசமான பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

அதில், சமூக ஊடக நிறுவனங்கள் வயது சரிபார்ப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், குறிப்பாக சமூக ஊடகங்கள், சூதாட்ட செயலிகள் (gambling apps), தானாக வீடியோ ஓடும் வசதி (auto-play), இலக்கு விளம்பரங்கள் (targeted advertising) போன்றவற்றில் வயதுக்கு ஏற்ற கட்டுப்பாடுகளை கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டீப் ஃபேக் மீது கடும் கட்டுப்பாடு தேவை

இதனிடையே அமைச்சர் வைஷ்ணவ், டீப் ஃபேக் தொடர்பாக இன்னும் கடுமையான விதிமுறைகள் தேவை என்றும் கூறினார். பன்னாட்டு நிறுவனங்கள், தாங்கள் செயல்படும் நாட்டின் கலாச்சார சூழலை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஒரு நாட்டில் தடை செய்யப்பட்டவை, மற்றொரு நாட்டில் தடை செய்யப்படாமல் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது குழந்தைகளையும் சமூகத்தையும் இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பது மிகவும் அவசியம். இதற்காக, ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால், இன்னும் என்ன விதிமுறைகள் தேவை என்பதைப் பற்றி தொழில்துறையுடன் உரையாடலை தொடங்கியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

சமீபத்தில் IT விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம், டீப் ஃபேக் உள்ளடக்கங்களை 3 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்கு கட்டாயமாக AI அடையாளமிட வேண்டும் உள்ளிட்ட நடைமுறைக்கு வந்துள்ளன.

மேலும், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு (Standing Parliamentary Committee) இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, டீப் ஃபேக்குகளை கட்டுப்படுத்த பரிந்துரைகள் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Read More : ஆதார் பயனர்கள் கவனத்திற்கு..! புதிய ஆதார் செயலி.. மத்திய அரசின் மிகப்பெரிய அப்டேட்..!

RUPA

Next Post

விருப்ப மனு வாங்கியவர்களோ 50,000 பேர்.. ஆனா திரும்பி வந்ததோ... விஜய்க்கு விபூதி அடித்த தவெகவினர்..!

Wed Feb 18 , 2026
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. காங்கிரஸ் கட்சியில் சிலர் மட்டும் […]
tvk vijay new 1

You May Like