இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, இதய நலம் குறித்து நாம் எடுத்துக்கொள்ளும் கவனக்குறைவுகள், பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கக்கூடும். இதற்கு முக்கியமான பங்கு வகிப்பது கொழுப்பு தான்.
உடலில் LDL, அதாவது கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது, அது தமனிகளில் தங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைந்து, இருதய சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகக்கூடும். ஆனால், வாழ்கைமுறை மாற்றங்கள் சில, இந்த அபாயத்தை குறைக்கலாம்.
ஒரு ஆரோக்கியமான வாழ்வை நோக்கி முதல் அடியாகும் விஷயம், உணவில் இருக்கும் கொழுப்புகளை கவனிப்பது. எல்லா கொழுப்புகளும் உடலுக்குத் தீமையில்லை. நம்முடைய அன்றாட உணவில் அதிகமாக சேரும் நிறைவுற்ற கொழுப்புகள் குறிப்பாக சிவப்பு இறைச்சி, முழுக்கொழுப்பு பால் பொருட்கள், நெய், வெண்ணெய் மற்றும் கிரீம் போன்றவை கெட்டக் கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
இதற்கு மாற்றாக எண்ணெய் நிறைந்த மீன்கள் (சால்மன், சார்டின் போன்றவை), ஆலிவ் எண்ணெய், நாட்டு விதைகள், வேர்க்கடலை மற்றும் முழுத்தானியங்கள் போன்றவை சாப்பிடலாம். மேலும், பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல், உடலில் கொழுப்பை கட்டுப்படுத்தும் முக்கிய ஆயுதமாக உடற்பயிற்சி அமைகிறது. நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது எந்தவொரு உடல் வேலையும் LDL அளவைக் குறைத்து நல்ல கொழுப்பை மேம்படுத்தும். வாரத்தில் குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
புகைப்பிடிப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சிகரெட்டுக்கே உடலுக்கு தீங்கு ஏற்படலாம் என்ற உண்மை, புகைப்பிடிப்பின் தீமையை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. இது HDL அளவைக் குறைத்து LDL அளவைக் கூட்டும். இதனால் இருதய நோய்கள், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் போன்ற ஆபத்துகளை பன்மடங்காக உயர்த்துகிறது.
மது பற்றிய பொது கருத்து ‘சிறு அளவில் பரவாயில்லை’ என்றால், அதற்கெதிராக பல மருத்துவ ஆய்வுகள் தெளிவாக எச்சரிக்கின்றன. மது உட்கொள்வது, எவ்வளவு குறைவாக இருந்தாலும், கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளை அதிகரிக்கிறது. முடிந்தவரை மது அருந்தும் பழக்கத்தில் இருந்து விலக வேண்டும். முழுமையாக நிறுத்த முடியாதவர்கள், படிப்படியாக குறைக்கும் முயற்சியைத் தொடங்கலாம்.
Read More : கோயிலில் தேங்காய் உடைக்கும்போது இப்படி வந்துருக்கா..? கெட்டதா? ஆன்மீகம் சொல்வது என்ன..?