கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டம் கோட்டூர் பகுதியில், சொத்து மற்றும் பணத்திற்காக பெற்ற தாய், தந்தை மற்றும் உடன்பிறந்த தங்கையையே இளைஞர் ஒருவன் படுகொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோட்டூரை சேர்ந்த பீமராஜ் – ஜெயலட்சுமி தம்பதியினருக்கு 27 வயதில் அக்ஷய் என்ற மகனும், அமிர்தா என்ற மகளும் இருந்தனர். சமீபத்தில் பீமராஜ் தனது சொத்து ஒன்றை விற்றதன் மூலம் சுமார் 1.2 கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளது. இதில் கணிசமான தொகையை மகள் அமிர்தாவின் பெயரில் வைப்பு நிதியாக (FD) அவர் வைத்துள்ளார். வேலையின்றி ஊர் சுற்றி வந்த அக்ஷய், அந்தப் பணத்தை அபகரிக்க திட்டமிட்டு தந்தையிடம் கேட்டுள்ளார்.
தந்தை தர மறுக்கவே, கடந்த மாதம் ஆத்திரமடைந்த அக்ஷய், தனது தந்தை, தாய் மற்றும் தங்கை ஆகிய மூவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்த உடல்களை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்த அக்ஷய், எவ்வித சலனமும் இன்றி பெங்களூருவுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து தனது குடும்பத்தினரை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து நாடகமாடியுள்ளார்.
தனது தந்தை மருத்துவமனைக்கு சென்றதாகவும், உறவினர்களுக்குப் பணம் கொடுக்கச் சென்றதாகவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை பரப்பியுள்ளார். மேலும், தனது தங்கை கர்ப்பமாக இருந்ததால் ஏற்பட்ட கௌரவ பிரச்சனையில் கொலை நடந்ததாக பழியை மர்ம நபர்கள் மீது திருப்பவும் முயன்றார். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் தங்கை கர்ப்பமாக இல்லை என்பது உறுதியானதால் போலீசாரின் சந்தேகம் அக்ஷய் மீது திரும்பியது.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நிலை குலைந்த அக்ஷய், பணத்திற்காகவே இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டார். 1.2 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கையின் பெயரில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் வைப்பு நிதி ஆகியவற்றை தன் வசப்படுத்தவே இந்தக் கொடூரத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து 3 உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



