சினிமா ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் வகையில், இந்தியாவில் முதல் முறையாக, டைனிங் டேபிளில் அமர்ந்து சினிமா பார்த்தபடியே சுடச்சுட உணவருந்தும் வசதி பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்கிற்கு செல்லும் போது வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல அனுமதி இல்லாதது, அத்துடன் இடைவேளையில் காஃபி, பாப்கார்ன் போன்ற நொறுக்குத் தீனிகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றி, முழுமையான உணவை உட்கொள்ளும் வாய்ப்பை இந்தச் சேவை வழங்குகிறது.
பெங்களூருவின் ஓசூர் சாலையில், எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் அருகில் அமைந்துள்ள M5 E-City மாலில் உள்ள பிவிஆர் ஐநாக்ஸ் (PVR INOX) திரையரங்கில்தான் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பிவிஆர் ஐநாக்ஸின் நிர்வாக இயக்குநர் அஜய் பிஜ்லி, “இதுதான் இந்தியாவின் முதல் ‘டைன்-இன்’ ஆடிட்டோரிய உணவகம். வாடிக்கையாளர்கள் புதிய முறையில் சினிமாவை ரசிக்கும் வகையில் இதைக் கொண்டு வந்துள்ளோம். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு திரையரங்கில், பார்வையாளர்களுக்காக சொகுசான சோபா இருக்கைகளுடன் டைனிங் டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் தங்கள் இருக்கையை விட்டு வெளியே எழாமல், அங்கிருந்தபடியே விரும்பிய உணவுகளை ஆர்டர் செய்து, சுடச்சுடச் சாப்பிட்டுக் கொண்டே திரைப்படத்தை ரசிக்க முடியும்.
பார்வையாளர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெனுவில் குளிர்பானங்கள், காபி, டீ ஆகியவற்றுடன் பல்வேறு வகையான உணவுப் பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. க்ரோஸ்டா, சினி கஃபே, டைன்-இன், ஸ்டீமெஸ்ட்ரி, வோக்ஸ்டார், இன்-பிட்வீன், ஃப்ரைடோபியா, டாக்ஃபாதர் மற்றும் லோக்கல் ஸ்ட்ரீட் உள்ளிட்ட வகைகளில் இருந்து உணவைத் தேர்வு செய்யலாம்.
பீட்சா, பர்கர், சாண்ட்விச் போன்ற துரித உணவு வகைகளில் இருந்து வேகவைத்த மற்றும் வறுத்தெடுத்த உணவுகள் வரை, அத்துடன் பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் பிரபலமான உள்ளூர் உணவுகள் உட்படப் பல சுவையான உணவு வகைகளை ரசிகர்கள் ஆர்டர் செய்து ருசிக்கலாம். இந்த புதிய வசதி, திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதாக சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.