பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ இருப்பதைப் போல, ஆண் மற்றும் பெண் என அனைத்துக் குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒரு மகத்தானத் திட்டம் தான் ‘NPS வாத்சல்யா’ (NPS Vatsalya) திட்டம். குழந்தைகளின் வருங்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம், கூட்டு வட்டியின் அபரிமிதமான பலனை முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்குகிறது. குறிப்பாக, நீண்ட கால சேமிப்பை விரும்பும் பெற்றோருக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.
இத்திட்டத்தின் சிறப்பம்சமே இதன் குறைந்தபட்ச முதலீடு தான். மாதம் வெறும் 1,000 ரூபாய் முதல் நீங்கள் உங்கள் குழந்தையின் பெயரில் சேமிக்க தொடங்கலாம். உதாரணமாக, உங்கள் குழந்தை பிறந்ததில் இருந்தே மாதம் 1,000 ரூபாய் வீதம் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சராசரியாக 14 சதவீத வருமானத்தை எதிர்பார்க்கும் பட்சத்தில், முதிர்வு காலத்தில் உங்கள் குழந்தையின் கணக்கில் 62 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை சேர்ந்திருக்கும்.
இதில் 60 சதவீதத் தொகையான சுமார் 37 லட்சம் ரூபாயை நீங்கள் மொத்தமாக திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள 40 சதவீதத் தொகை ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்யப்பட்டு, அதன் மூலம் மாதம் சுமார் 12,000 ரூபாய்க்கும் மேல் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த முதலீட்டை 60 வயது வரை தொடர்ந்தால் கிடைக்கும் பலன் மலைக்க வைக்கிறது. 60 ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் மொத்த தொகை வெறும் 7.2 லட்சம் ரூபாயாக இருந்தாலும், கூட்டு வட்டியின் பலனால் அது சுமார் 11.57 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்டமான தொகையாக வளரும் வாய்ப்புள்ளது. நீண்ட கால முதலீடு என்பதால், ஆரம்பத்தில் வளர்ச்சி குறைவாக தெரிந்தாலும், 20 முதல் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொகை அசுர வேகத்தில் அதிகரிக்க தொடங்கும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் அல்லது என்.பி.எஸ் (NPS) அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகப் பெற்றோர் இத்திட்டத்தில் மிக எளிதாக இணையலாம்.
தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஓய்வுக்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்ற விரும்பும் பெற்றோருக்கு, ‘NPS வாத்சல்யா’ ஒரு மிகச்சிறந்த நிதி அரணாக அமையும் என்பதில் ஐயமில்லை. முதலீட்டுத் தொகையை அதிகரிக்கும் பட்சத்தில், வருங்காலத்தில் கிடைக்கும் பலன்களும் பல மடங்கு உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.



