தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில், இயக்குநர் போயபதி ஶ்ரீனுவின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ‘அகண்டா 2’ திரைப்படம், இன்று (டிசம்பர் 5) வெளியாவதாக இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் நிறுவனம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. “கனத்த இதயத்துடன் இந்தப் painful செய்தியை அறிவிக்கிறோம். தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, அகண்டா 2 திரைப்படம் திட்டமிட்டபடி டிசம்பர் 5 அன்று வெளியாகாது. படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ஒவ்வொரு ரசிகரின் ஏமாற்றத்தையும் நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம். இப்பிரச்சனைகளைத் தீர்த்து, புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்க இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. விரைவில் ஒரு நேர்மறையான அறிவிப்பை வெளியிடுவோம்,” என்று தங்கள் அறிக்கையில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.
‘அகண்டா 2’ திரைப்படம், 2021-ல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அகண்டா’ படத்தின் தொடர்ச்சியாகும். போயபதி ஶ்ரீனுவும் பாலகிருஷ்ணாவும் இணைந்து இதற்கு முன்னதாக சிம்ஹா (2010) மற்றும் லெஜண்ட் (2014) போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளதால், இந்த இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. முதல் பாகம் சுமார் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவாகி, உலக அளவில் ரூ.117 கோடி வசூலைக் குவித்தது.
மேலும், இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாக, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் வியாழக்கிழமை அன்று பிரம்மாண்டமான சிறப்புக் காட்சிகள் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தெலுங்கு மாநிலங்களில் இந்தச் சிறப்புக் காட்சிகளுக்காக டிக்கெட் விலையை உயர்த்தவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவை தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.
தற்போது ஒட்டுமொத்தப் படத்தின் வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன், ஆதி பினிசெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.



